இலங்கை வந்த சீன பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்த சீன பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே புகையிரதத்தில் சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் தடியால் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல புகையிரத நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை

நாவலப்பிட்டி, இங்குருஓயா புகையிரத நிலையத்தை அண்மித்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாவலப்பிட்டி காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு சந்தேகநபர்களும் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.