Naxal Interpol புலனாய்வாளர்களால் நோட்டமிடப்பட்ட இஷாரா
இலங்கை பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்னேவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேபாள காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், கொலையுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இந்தக் குழு காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இஷார செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே, ஜீவதாசன் கனகராசா, தக்ஸி நந்தகுமார், தினேஷ் ஷியமந்த டி சில்வா களுதாரா, கெனடி பஸ்தியன் பிள்ளை மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே என சிரேஷ்ட காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சஞ்சீவ கொலை
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினுள் இடம்பெற்ற சஞ்சீவ கொலையில் இஷாரா செவ்வந்தி பிரதான குற்றவாளியாவார் .
குற்றச் செயல்களுக்காகத் தேடப்படும் நபர்களைக் கண்காணிக்க இன்டர்போல் உறுப்பு நாடுகளுக்கு இலங்ழகை அழைப்பு விடுத்திருந்தது.
மேலும் குறித்த விசாரணையின் தகவல்களை வழங்க அந்நாட்டல் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகமும் தீவிரம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையை நேபாளத்தின் நக்சலில்(Naxal) அமைந்துள்ள இன்டர்போல்(INTERPOL) தேசிய மத்திய பணியகத்தின் குழு,மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு சந்தேக நபர்களும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்ட கெஹல்பத்தர பத்மே தலைமையிலான இலங்கை பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்திருந்தது, ஓகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் பத்மே கைது செய்யப்பட்டார்.
சஞ்சீவாவின் கொலைக்கு பத்மே மூளையாக செயல்பட்டமை விசாரணைகளில் வெளிவந்தது. கொலை நடந்த நேரத்தில், முக்கிய சந்தேக நபரான செவ்வந்தி நேபாளத்தின் பக்தபூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, தான் ஒரு இந்திய குடிமகன் என்று வீட்டு உரிமையாளரிடம் கூறிக் கொண்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்
"அவர் இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தும் , சுமார் ஒரு மாதமாக பக்தபூரில் தங்கியிருந்ததாகவும், பெரும்பாலும் பெறப்பட்ட அறைக்குள் நீண்டகாலமாக தங்கியிருந்ததாகவும் கூறியதாக” நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கூறியதாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய டில்ஷான் பியுமாங்க, சம்பவம் நடந்த அன்றே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற சிசிரிவி காட்சிகளில், செவ்வந்தி ஒரு சட்டத்தரணியாக மாறுவேடமிட்டு நீதிமன்றத்திற்குள் நுழைந்து, ஒரு புத்தகத்திற்குள் மறைத்து துப்பாக்கியை நீதிமன்றுக்குள் கடத்திச் சென்றது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது அடையாளம் தெரியவந்த பிறகு, செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்திருந்தன.
இந்நிலையில் அவர் தப்பிக்க சுமார் 6.5 மில்லியன் ரூபாய் செலவிட்டதாகவும், சுமார் இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்து, பின்னர் காத்மாண்டுவை தரைவழியாக அடைந்ததாகவும் நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேபாள காவல்துறை தன்னைக் கைது செய்யாது என்று நம்பியதால், தான் பாதுகாப்புக்காக அங்கு வருகைத்தந்ததாக இஷாரா கூறியுள்ளார்.
இலங்கை காவல்துறை மற்றும் காத்மாண்டுவில் உள்ள தூதரகத்தின் உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து, நேபாள காவல்துறையினர் ஒரு நடவடிக்கையை இதற்காக தொடங்கியுள்ளனர்.
மற்றொரு சந்தேக நபரான ஜே.கே. பாய் என்றும் அழைக்கப்படும் கெனடி பஸ்தியன் பிள்ளை, தாமெலில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய கடத்தல் கும்பல்
ஜே.கே. முக்கிய கும்பல் தலைவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் அவர் வழங்கிய தகவல்களைப் பயன்படுத்தி, நாங்கள் செவ்வந்தியை கைது செய்ததாகவும் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜீவதாசன் கனகராசா மற்றும் தக்சி நந்தகுமார் ஆகியோர் அந்நாட்டின் மித்ராபார்க், பேருந்து நிலையம் அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் கடவுச்சீட்டை வைத்திருந்ததாகவும், அவர்கள் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும், மீதமுள்ள நால்வரிடமும் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும், அவர்கள் கடல் மார்க்கமாக இந்தியா வழியாக நுழைந்து பின்னர் தரை வழியாக நேபாளத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் காவல்துறை வட்டாரங்கள் அந்நாட்டு கூறியுள்ளன.
அவர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதால், அந்நாட்டின் குடிவரவுத் துறையின் ஆதரவுடன் விசாரணை நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆறு சந்தேக நபர்களையும் நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் ஏற்கனவே நேபாள சட்டத்தின் கீழ் தேவையான அபராதங்களைச் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேபாளமும் இந்தியாவும் திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதனால் குற்றவாளிகள் இரு நாடுகளுக்கும் இடையில் சட்டிவிரோத நுழைவுப் புள்ளிகள் வழியாக தப்பிச் செல்ல முடிகிறது.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தப்பியோடியவர்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்ய காவல்துறை ஒருங்கிணைப்பு உதவுகிறது என அந்நாட்டு பாதுகாப்பு தரப்புக்கள் விளக்கியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
