சிறுவர்களுக்கு ஆதரவளித்தல் : ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள் வெளியீடு
அவசரகால அனர்த்த சூழ்நிலைகளில் சிறுவர்களுக்கு ஆதரவளிப்பது குறித்து ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவசர காலங்களில் சிறுவர்களுக்கு ஆதரவளிக்கும் ஆசிரியர்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் என இந்த வழிகாட்டுதல்கள் இரண்டு வகைகளாக கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
தொலைபேசி இலக்கம் அறிமுகம்
அந்த வழிகாட்டுதல்களின் ஊடாக, சிறுவர்களை சமமாக நடத்துங்கள், சிறுவர்களின் கவலைகளைக் கேளுங்கள், சிறுவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரும் இடமாக பாடசாலை இருப்பதை உறுதி செய்யுங்கள் என ஆசிரியர்கள் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

சிறுவர்கள் மீண்டும் அதிர்ச்சிகரமான அனுபவங்களை அனுபவிக்க வைப்பதைத் தவிர்த்தல், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுதல், பாடசாலைக்குள் உள்ள பணியாளர் அறைகள் அல்லது பிற பொது இடங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பற்றி விவாதித்தல் என்பன தவிரக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை முறைப்பாடளிக்க 1929 தொலைபேசி இலக்கமும், சிறுவர்களின் மனநலத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் 1926 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |