ரணில் தரப்புக்கு எதிராக திரும்பிய ஐக்கிய தேசிய கட்சி
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளமைக்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது, புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி கட்சித் தலைவர்களின் அனுமதியின்றி தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகளை நிரப்புவது அரசியல் திருட்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்
கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் 5 இலட்சத்து 835 வாக்குகளைப் பெற்ற, புதிய ஜனநாயக முன்னணி 2 தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 5 ஆசனங்களைக் கைப்பற்றியது.
அதற்கமைய, ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், எஞ்சியிருந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்துக்காக, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் பெயர் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் திருட்டு
இவ்வாறானதொரு பின்னணியில், தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பதவிகளை நிரப்புவது தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் கட்சித் தலைவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளதோடு, புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அந்தத் தீர்மானத்தை மீறி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை நிரப்புவது முற்றிலும் அரசியல் திருட்டு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |