உள்ளாடையா..! எதிர்காலமா..! மிரட்டிய அதிகாரிகள் - கதறியழுத ‘நீட் தேர்வு’மாணவிகள்
நீட் தேர்வு சோதனை
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் கருவி எச்சரித்ததால் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதோடு, விசாரணை அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இன்ஸ்டியூட் ஒப் இன்பர்மேஷன் டெக்னாலஜி வளாகத்தில் இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஜூலை 17ஆம் திகதியான நேற்று இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
உள்ளாடைகளை கழற்ற வைத்த சம்பவம்
நீட் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக தேர்வு மையங்களுக்கு வந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக பேர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள், கைக்கடிகாரம், வளையல், கமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்தன.
இதனால், தேர்வு மைய அதிகாரிகள் மாணவ மாணவிகளை தனித்தனியே பரிசோதித்துள்ளனர். அப்போது மாணவிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் சில மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருந்ததால் மெட்டல் டிடெக்டர் எச்சரிக்கை செய்துள்ளது.
இதையடுத்து அந்தக் கொக்கிகளை அகற்றும்படி அதிகாரிகள் மாணவியை வற்புறுத்தியுள்ளனர். அதனை அகற்றாவிட்டால் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க முடியாது என வற்புறுத்தியதோடு உள்ளாடை முக்கியமா உங்கள் எதிர்காலம் முக்கியமா என மிரட்டும் தொணியில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு தர்ம சங்கடமான சூழல்
இதையடுத்து தேர்வு எழுத வந்திருந்த சில மாணவிகள் கண்ணீர் மல்க, உள்ளாடைகளை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுத வேண்டிய தர்ம சங்கடமான சூழல் உருவானது.
இதனால் அந்த மாணவிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக புகார் கூறிய நிலையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
