எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும்: இஸ்ரேலுக்கு பைடன் உறுதி
காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் திகதி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. மேலும், 100 க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதனால் இஸ்ரேல் ஹமாஸ் மீது போர் அறிவித்து, காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எந்தவித தொய்வும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா துணை நிற்கும்
இதுவரை ஏவுகணை தாக்குதல் மட்டுமே நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழியாகவும் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார்.
இதன்போது பைடன் தெரிவிக்கையில், 75 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலின் நிறுவனர்கள், சுதந்திரம், நீதி மற்றும் அமைதி அடிப்படையில் ஒரே நாடாக இஸ்ரேலை அறிவித்தனர்.
இந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் இஸ்ரேலுடன், இன்றும், நாளையும் மற்றும் எப்போதும் அமெரிக்கா துணையாக நிற்கும். அதற்கு நாங்கள் உறுதி கூறுகிறோம் என கூறியுள்ளார்.
பைடனின் உத்தரவு
மேலும், இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படையாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என கூறினார்.
ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், காசா பகுதி மக்களுக்கு உதவி தேவையாக உள்ளது என்று கூறிய பைடன், காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு விசாரணையை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் வந்துள்ள நிலையில் அந்நாட்டு விமானப்படை காசா மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.