சர்வதேச கடப்பாடுகளை மீறிய இஸ்ரேல் : பிரதமரின் சூளுரை
போர்க் கால அமைச்சரவையை விரிவாக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு, காசாவிலுள்ள ஹமாஸ் இயக்கம் முழுமையாக அழிக்கப்படும் என மீண்டும் சூளுரைத்துள்ளார்.
தரைவழித் தாக்குதலுக்கான உச்சக் கட்ட தயார்படுத்தலாக காசாவின் எல்லைப் பகுதிக்கு அருகே நூற்றுக்கணக்கான தாங்கிகளை இஸ்ரேல் நகர்த்தியுள்ளது.
காசாவின் வட பிராந்தியத்திலுள்ள மக்களை தென் பிராந்தியம் நோக்கி இடம்பெயருமாறு பணித்திருந்த நிலையில், காசா மீது தொடர்ச்சியான வான் வழித் தாக்குதல்களையும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமரின் இந்தச் சூளுரை வெளிப்பட்டிருக்கிறது.
கடுமையான ஆபத்திற்குள் பொதுமக்கள்
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 720 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 2 ஆயிரத்து 300 ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
மறுபுறம் ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதலில் 286 இஸ்ரேலிய படையினர் உடப்ட ஆயிரத்து 200 இஸ்ரேலியர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
இதனிடையே இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் தாக்குதலில் இஸ்ரேலியர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், லெபானினில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் இலக்குகள் மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் காசா மற்றும் லெபனானில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல், வெள்ளை பொஸ்பரஸைப் பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களை கடுமையான ஆபத்திற்குள் இஸ்ரேல் தள்ளியுள்ளது எனவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் லெபனான் மற்றும் காஸாவில் எடுக்கப்பட்ட காட்சிகளை தாம் சரிபார்த்ததாகவும் மனித உரிமை குழுவான சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
காசாவின் துறைமுக நகரம் மற்றும் இஸ்ரேல் - லெபானான் எல்லையில் எறிகணை தாக்குதல்களின் போது வெள்ளை பொஸ்பரசை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேச கடப்பாடுகளை மீறிய இஸ்ரேல்
மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்வதற்கான சாத்தியமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச கடப்பாடுகளை இஸ்ரேல் மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகள் கடுமையான தீக் காயங்களை மாத்திரமல்லாமல், வாழ் நாள் முழுவதும் துன்பப்படும் வகையில் காயங்களை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் இரண்டாவது நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் டுவைட் டி ஐசன்ஹவரும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டுடன் இணைந்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்களை விமர்சிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் இணைந்துகொண்டுள்ளது.
மேலதிக போர் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக கூறியுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாய் யீ, முற்றுகையிடப்பட்ட பகுதியில் பலஸ்தீனியர்களுக்கு கூட்டாக தண்டனை வழங்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவின் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் வைத்து இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் தற்போதுள்ள நிலைமைகளை மேலும் தீவிரமடையச் செய்யும் வகையில் செயற்படக் கூடாது எனவும் விரைவில் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் எனவும் வாய் யீ வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கான மேற்குலக அழுத்தம்
சர்வதேச சட்டத்திற்கு இணங்க செயற்படுமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க மேற்குலக நாடுகள் தவறி வருகின்றன என பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்திக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சரான கிளேர் ஷோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை குண்டுத் தாக்குதல்களை நடத்தி, இஸ்ரேல் கொலை செய்வதாகவும் அதற்கு மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.