ரணிலுக்கு மகாசங்கத்தினர் கடும் அழுத்தம்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கோரி மகாசங்கத்தினரால் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து மகா பீடம், அஸ்கிரிய மகா பீடம், அமரபுர மகா பீடம் மற்றும் ராமஞ்ஞ மகா பீடம் ஆகியன கூட்டாக இணைந்து இக்கடிதத்தை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டின் இறையான்மை , பூகோள தனித்துவத்தன்மை என்பவற்றைப் பாதுகாத்து பிரஜைகள் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான விதிமுறைகளை உருவாக்குதல் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கடும் எதிர்ப்பு
எனினும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தின் சில ஏற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தின் பிரதான காரணிகளான மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் , அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பன முடக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சமூகத்தில் பரவலாகத் தெரிவிக்கப்படுவதோடு, அதற்கு கடும் எதிர்ப்புக்களும் வெளியிடப்படுகின்றன.
நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு பொது மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும்.
அதற்கமைய அவற்றுக்கு பொறுத்தமான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு பொறுத்தமான பொறிமுறையை உருவாக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பிரதான கடமையும் பொறுப்புமாகும்.
இவ்வாறான ஜனநாயக ஆட்சி முறைமைகளுக்கு பதிலாக அடக்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமானால் அது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது பாரிய வெறுப்பினை ஏற்படுத்தும்.
உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள்
புதிய சட்ட மூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுதல் உள்ளிட்டவற்றையும் பயங்கரவாத செயற்பாடுகளாக சித்தரிக்கக் கூடும்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வது குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான சட்ட மூலம் அறிமுக்கப்படுத்தப்படுவதானது தேசிய ரீதியிலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் ஜனநாயகம் தொடர்பில் பாரதூரமான சந்தேகத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையலாம்.
எனவே நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் பொது மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தி விரிவான சமூக கருத்து பகிர்வுகளுக்கான வாய்ப்புக்களை வழங்கி விசேட நிபுணர்கள் சபையொன்றின் ஊடாக இந்த சட்ட மூலத்திலுள்ள பொறுத்தமற்ற ஏற்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” - என்றுள்ளது.
