அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேண புதிய ஆணைக்குழு நியமனம்!
நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும், அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற பிரதம நீதியரசரும் அதிபர் சட்டத்தரணியுமான பிரியசாத் டெப் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
1948ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் சரத்துக்களுக்கமைய புதிய ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.
பணிகள்
தற்போதுள்ள தேர்தல் சட்டங்களை ஆய்வு செய்வது, அவற்றைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவது, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தத் தேவையான பரிந்துரைகளை வழங்குவது மற்றும் ஊடகங்களை சரியாக கையாள்வது தொடர்பிலான நெறிமுறைகளைத் தயாரிப்பது போன்ற பணிகளை இந்த ஆணைக்குழு முன்னெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பொது விவகாரங்களின் போது அரசியல், சுயேட்சைக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் நடத்தை தொடர்பான ஒழுங்கு விதிகளுக்கான பரிந்துரைகளையும் இந்த ஆணைக்குழு வழங்கும்.