புதிய மின் கட்டண திருத்தம் - அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார் ஜனக ரத்நாயக்க
இலங்கையில் அதிகரிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்தத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இணையவழி மூலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.
ஆணைக்குழுவின் கூட்டு தீர்மானத்துக்கு அமைய மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ள போதிலும், அதற்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஆணைக்குழு 36 வீத மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தது எனவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறாக மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது ஒழுக்கமற்ற மற்றும் சட்டவிரோதமான செயல் என அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஜனக ரத்நாயக்கவின் கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள காரியாலயம் காவல்துறையினரால் நேற்று முத்திரையிடப்பட்டுள்ளது.
ஆவணங்களை அழிக்க முயற்சி
ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க ஒரு சிலர் முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால், கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு பெற்றுக் கொண்ட உத்தரவின் பிரகாரம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அரசு முத்திரையிடப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும்
அவர் நாடு திரும்பிய பின்னர் அலுவலகம் திறக்கப்படும்
எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
