சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வரர் மனைவி தப்பியோட்டம்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் மரணமடைந்த இலங்கையில் உர இறக்குமதி நிறுவனமான ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக ஜகார்த்தா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவர் தனது பிரேசிலிய மனைவி, மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் இந்தோனேசியாவில் ஒரு குறுகிய விடுமுறையில் இருந்தபோது இறந்தார்.
மனைவி பிள்ளையுடன் இந்தோனேஷியா பயணம்
ஒனேஷ் சுபசிங்க தனது பிரேசிலைச் சேர்ந்த மனைவி ரோசா சில்வா, நான்கு வயது மகள் மற்றும் பிரேசிலிய பணிப்பெண் ஆகியோருடன் கடந்த ஜனவரி 20ஆம் திகதி இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்தார். இவர்கள் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
தொழில் நிமித்தமாக அந்நாட்டில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தனது அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஆனால் கடந்த ஜனவரி 31ம் திகதி முதல் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுபசிங்க தங்கியிருந்த வீடு மூடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அவரது சடலம் அங்கு காணப்பட்டது.
பெப்ரவரி 03 ஆம் திகதி அதன் நிர்வாகம் ஒனேஷ் சுபசிங்கவின் பிரத்தியேக செயலாளருக்கு இதுபற்றி அறிவித்தது.
"தொந்தரவு செய்யாதே"
வீட்டு வளாகத்தின் நிர்வாகம் சிசிடிவியை சோதனை செய்தபோது, ஜனவரி 31 செவ்வாய்க்கிழமை அன்று கதவில்"தொந்தரவு செய்யாதே" என்ற வாசகம் எழுதப்பட்ட நிலையில் ஒனேஷ் சுபசிங்கவின் மனைவி, நான்கு வயது மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் அறையை விட்டு வெளியேறியது தெரிந்தது.
எனினும், அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
