போராட்ட அச்சத்தால் ரணில் அவசர வர்த்தமானி அறிவிப்பு
இலங்கையின் முக்கிய சேவைகள் சிலவற்றை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவை

இலங்கையில் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல வேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் - எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, சிகிச்சையளித்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கையெழுத்து சேகரிக்கும் போராட்டம்

இலங்கையில் மின்சார கட்டணம் அதிகரிப்பு தொடர்பான பொதுமக்களின் கரிசனைகளும் சீற்றங்களும் அதிகரித்துவரும் நிலையில், உத்தேச மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக மின்பாவனையாளர்கள் சங்கம் 69 இலட்சம் பாவனையாளர்களின் கையெழுத்தை சேகரிக்கும் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.