மின்சார கட்டணம் தொடர்பான புதிய யோசனை : கஞ்சன விஜேசேகர தகவல்
இலங்கையில் மின்சார கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திருத்துவது தொடர்பான புதிய யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.
சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் புதிய யோசனையை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தவறான கோட்பாடை பின்பற்றிய சிறிலங்கா மின்சார சபை
இலங்கையில் ஒரு வருடத்துக்கு இரு தடவைகள் மாத்திரம் மின்சார கட்டணத்தை அதிகரிக்கலாம் எனும் தவறான கோட்பாடை சிறிலங்கா மின்சார சபை இதுவரை பின்பற்றி வந்ததாக கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்காது, சபை பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தை மின்சார சபை எடுக்க முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபை மறுசீரமைக்கப்படும்
அத்துடன், சிறிலங்கா மின்சார சபைபை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த முன்மொழிவுடன் தொடர்புடைய ஆவணங்கள் சட்ட மா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கருத்துக்களை அறிந்து கொண்டதன் பின்னர், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையில் சமர்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.