சூடு பிடிக்கும் ஐபிஎல் களம் - முதல்முறையாக 991 வீரர்கள்
இந்தியன் பிரிமியர் லீக்(ipl) 2023ற்கான வீரர்களை ஏலமிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் மினி ஏலம் எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஏலத்திற்கு 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து இருப்பதோடு மினி ஏலத்தில் அத்தனை பெயரும் ஏல மேடைக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் 405 வீரர்கள்
இதனையடுத்து, தங்களுக்கு தேவையான அல்லது அணிகள் விருப்பம் காட்டும் வீரர்களை மட்டும் தேர்வு செய்து அனுப்புமாறு பி.சி.சி.ஐ அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது திருத்தப்பட்ட இறுதிக் கட்ட ஐ.பி.எல் பட்டியலில் 405 வீரர்கள் காணப்படுவதாகவும் இதில் 273 இந்திய வீரர்களும், 132 வெளிநாட்டு வீரர்களும் காணப்படுவதாகவும் இந்த வீரர்கள் அனைவரும் 43 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர் என்றும் ஐ.பி.எல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை ஏலமானது மொத்தமாக 87 இடங்களுக்கு நடைபெறுகிறது. இதன் காரணமாக 87 இடங்களும் நிறைவு அடைந்துவிட்டால், ஏலம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அணி
மேலும், மினி ஏலம் விரைவாக நடைபெறும் எனவும் இந்த மினி ஏலம் இந்திய நேரப்படி பி.ப 2.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
குறித்த ஏலத்தில் அதிகபட்சமாக ஐதராபாத் அணி 13 வீரர்களையும், கொல்கத்தா அணி 11 வீரர்களையும், சென்னை அணி அதிகபட்சமாக 7 வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
