கடற்றொழிலாளர்களுக்கு அறிமுகமாகவுள்ள புதிய சட்டமூல வரைவு...! யாழில் விசேட கலந்துரையாடல்
வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் கடற்றொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் நடைபெற்றுள்ளது.
புதிய சட்டமூலம்
இந்தக் கலந்துரையாடலில், புதிய சட்டமூலம் தொடர்பாக கடற்றொழில் திணைக்கப் பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து கடற்றொழில் அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் தவராசா வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினார்.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் சட்ட ஆலோசகர் மற்றும் துறைசார் வல்லுநர்கள், சமாச உறுப்பினர்கள், யாழ் மாவட்ட கடற்றொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
பல்வேறு விடயங்கள்
இந்தக் கலந்துரையாடலின்போது, கடற்றொழில் நடவடிக்கை உரிமம் வழங்கலில் உள்ள பொதுவான கோட்பாடுகள், கடற்றொழில் உரிமத்தின் கால எல்லை, கடற்றொழில் நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.
அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல் அல்லது கட்டுப்படுத்தல், இலங்கை நிலப்பரப்புகளில் கடற்றொழில் செயற்பாடுகளை நடத்துவதற்கான கடற்றொழில் உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |