இலங்கையில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய சட்டம்
இலங்கையில் பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என புத்தசாசன, கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
அதேநேரம், இலங்கையில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.
மத விமர்சனம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் சிலர் மத சுதந்திரம் என்ற போர்வையில் ஏனைய மதங்களை விமர்சிக்கிறார்கள்.
மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் ஒடுக்கவும், மத நல்லிணக்கத்தை அச்சுறுத்தவும் யாருக்கும் உரிமை இல்லை. இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்க்கிறோம்.
எந்த மதத்தையும் இழிவுபடுத்தாத வகையில் அதற்கான சட்ட வரைபை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்பொருட்கள் விவகாரத்தில் தொல்பொருட்கள் ஆணையை மீறி யாரும் செயற்பட முடியாது. எனவே தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கிறோம்.
தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம்
தொல்பொருள் கட்டளைச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, தற்பொழுதுள்ள தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கும். கடற்படைத் தளபதியுடன் நடத்திய ஆலோசனையில், கடலுக்கு அடியில் உள்ள தொல்பொருள் இடங்களை அப்படியே பேணவும் அந்த இடங்களை சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எமது நாட்டிலிருந்து நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள பெறுமதிமிக்க தொல்லியல் பொருட்களை மீளப் பெறுவதற்கு அமைச்சு கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
இலங்கையில் மரபுரிமையான பொருட்களை மீள வழங்க நெதர்லாந்து அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தும் தங்களிடமுள்ள ஓலைச்சுவடிகளை வழங்க உடன்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் சில காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து அந்த நாடுகளில் இருந்த அதே நிலையில் பாதுகாக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதனால்தான் இங்கிலாந்திலிருந்து ஓலைச்சுவடிகளின் டிஜிட்டல் பிரதிகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது” - என்றார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)