விரைவில் புதிய காவல்துறைமா அதிபர் நியமிக்கப்படுவார் : ஆஷு மாரசிங்க
விரைவில் தகுதியான ஒருவர் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றைய தினம்(06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பேரவையின் அதிகாரம்
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“காவல்துறைமா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரம் அதிபருக்கே பூரண அதிகாரம் இருக்கிறது.
அதிபர் பெயர் குறிப்பிட்டு அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பும் நபர்கள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை அதிபருக்கு தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கிறது.
அதற்காக அவர்கள் பெயர் குறிப்பிட்டு அனுப்பும் நபரைத்தான் காவல்துறைமா அதிபராக நியமிக்க வேண்டும் என்பதில்லை.
அதிபர் தனக்கு விரும்பியவரை காவல்துறைமா அதிபராக நியமிக்க அரசியலமைப்பின் ஊடாக அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
வெளிப்படைத்தன்மை
அத்துடன் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கும்போது அதனை வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்கே அரசியலமைப்பு பேரவைக்கு அதிபர் பெயர்களை பரிந்துரை செய்கிறார்.
அரசியலமைப்பு பேரவை பிரேரிக்கும் நபரை நியமிப்பதற்கும் நியமிக்காமல் இருப்பதற்கும் அதிபருக்கு அதிகாரம் இருக்கிறது.
அதனால் நாட்டை நிர்வகித்து செல்லும் அதிபருக்கு, அவருக்கு பொருத்தமான ஒருவரை காவல்துறைமா அதிபராக நியமிக்க விரைவில் நடவடிக்கை எடுப்பார்.
மேலும் சில பதவிகளுக்கு நியமிக்கும் போது, அந்த நபர் குறித்த பதவிக்கு பொருத்தமானவரா ? அதற்கான திறமை அவரிடம் இருக்கிறதா போன்ற அனைத்து விடயங்களையும் தெரிந்துகொண்டே பதவி வழங்க வேண்டி இருக்கிறது.
அதனால் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்படுபவர் தொடர்பாக அனைத்து தகுதிகளையும் கவனத்திற்கொண்டே அதிபர் புதிய காவல்துறைமா அதிபரை நியமிக்க இருக்கிறார்.” என்றார்.