சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு!
சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் அதன் செயற்பாடு மற்றும் நிதி நிலைகளில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இன்று (11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய விமான சேவை செலுத்தவுள்ள 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை உள்வாங்குவதன் மூலம் அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதால் அதற்குரிய முன்னேற்றம் காட்டப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
நிதி இருப்பு
சிறிலங்கன் எயர்லைன்ஸ் அண்மைக்காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றமையும், அதன் செயற்பாட்டுச் சிக்கல்களின் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட கடும் அசௌகரியங்கள் காரணமாகவுமே இந்தக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறிலங்கா அதிபரின் முன்மொழிவின் அடிப்படையில், நிதியமைச்சர் என்ற வகையில், விமான நிறுவனம் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் இருந்து 510 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈடுகட்ட அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி, கவர்ச்சிகரமான நிதி இருப்புநிலைக் குறிப்புடன், சிறிலங்கன் எயர்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களில் மறுசீரமைப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
உறுதியற்ற தன்மை
விமான சேவையின் தேவையற்ற செலவுகள் குறைக்கப்பட வேண்டும், அதேவேளை அடுத்த 6 மாதங்களில் நிறுவனத்தில் நல்ல நிதி ஏற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்வாக அதிகாரிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இணைந்து இந்த காரணத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறிய அவர், ஏறக்குறைய 6000 ஊழியர்களின் வேலைகளில் உறுதியற்ற தன்மை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
குறித்த கால அவகாசத்திற்குள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் தனது ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்காவிட்டால் 6000 ஊழியர்கள் வேலையை இழக்கவேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |