ஸ்கொட்லாந்து முதலமைச்சரின் எதிர்பாராத அறிவிப்பு
ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரூஜன், பதவி விலகுவதாக எதிர்பாராத அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் அறிவிப்பை பின்பற்றி அவரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பதவி விலகல்
தமது பதவி விலகலானது, திடீரென அறிவிக்கப்பட்ட ஒன்றாக தோன்றாலாம் என்ற போதிலும், மிகவும் ஆழமாகவும் நீண்டகால மதிப்பீடு செய்த பின்னருமே தாம் இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
சில வாரங்களாக இந்த முடிவை மேற்கொள்ளும் விடயத்தில் கடுமையாக போராடியதாகவும் நிக்கோலா ஸ்ரூஜன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பின் போது பிரித்தானியாவின் ஒரு பகுதியாக ஸ்கொட்லாந்து இருப்பதற்கு ஆதரவாக, 55 வீதமான மக்கள் வாக்களித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்பை தொடர்ந்து ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவராக நிக்கோலா ஸ்ரூஜன் பொறுப்பேற்றிருந்தார்.
முதலமைச்சராக தொடர்வது சரியானதா மற்றும் மிக முக்கியமாக, நாட்டிற்காகவும், கட்சிக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த காரணத்திற்காக சரியாகச் செயல்படுகிறேனா என்ற இரண்டு கேள்விகளுக்கு தாம் பதில் தேட முற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்ற பதிலை பெறுவது தொடர்பில் உறுதியாக நம்புவதற்கு அண்மைக்காலமாக கடினமாக உழைக்க வேண்டியிருந்தது எனவும் தற்போது அந்த கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலுக்கே தாம் வந்துள்ளதாகவும் நிக்கோலா ஸ்ரூஜன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்தின் அடுத்த முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிக்கோலா ஸ்ரூஜன் முதலமைச்சராக தொடர்வார் என்பதுடன், ஸ்கொட்லாந்து சட்டமன்றத்தின் உறுப்பினராக நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கான காரண கார்த்தா
ஸ்கொட்லாந்துக்கு கிடைத்த மிகச் சிறந்த முதலமைச்சர் மற்றும் சிறந்த நண்பர் நிக்கோலா ஸ்ரூஜன் எனவும் சக கட்சித் தலைவர் இயன் பிளக்ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெற்றால், அதன் காரண கார்த்தாவாக அவர் இருப்பார் என்பதுடன், அதற்கான அடித்தளத்தை மிகவும் உறுதியாக அமைத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
நிக்கோலா ஸ்ரூஜன் கையில் எடுத்த பணியை நிறைவுசெய்வதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் இயன் பிளக்ஃபோர்ட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
