தமிழ் மக்கள் வழங்கிய தேர்தல் ஆணையை பறிக்கவே ‘பிரஜா சக்தி’ திணிக்கப்படுகிறதா.! செ. நிலாந்தன் கேள்வி
கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் அதிகாரங்களை புறக்கணித்து, மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத “பிரஜா சக்தி” குழுக்களின் அனுமதி மற்றும் பரிந்துரைகளை பெற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை உள்ளூராட்சி சபைகள் மீது திணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரங்களை முற்றாக புறக்கணித்து, புதிதாக ‘பிரஜா சக்தி’ என்ற அதிகார மையத்தை உருவாக்கி அதன் அனுமதியை பெற்றால்தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ள முடியும் என எங்களுக்கு எழுத்து மூல அறிவுறுத்தல் விடுப்பது எந்த வகையான ஜனநாயகம்? இதற்கான சட்டபூர்வ அதிகாரம் என்ன என்பதை அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு கூற வேண்டும்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள Local Authority Small Bridges Sustainable Improvement Project 2026–2029 தொடர்பான கடிதத்தில், 2027ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை சம்பந்தப்பட்ட பிரஜா சக்தி குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் சம்மதத்துடன் சமர்ப்பிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரங்களை பறிக்க அரசாங்கம் சதி?
இதன் மூலம், மக்கள் வாக்களித்து தெரிவு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் தீர்மானங்களை புறக்கணித்து அதற்கு மேலாக தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத ஒரு குழுவின் சம்மதம் தேவை என்ற நிலை உருவாக்கப்படுகிறது.
அப்படியானால் மக்கள் எதற்காக பிரதேச சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்கள்?
தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டை புறக்கணித்து, தங்களது வாக்குகளின் மூலம் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தங்களுக்கு தேவையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர்.

அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலா, ‘பிரஜா சக்தி’ என்ற அமைப்பை எம் மீது திணித்து, மக்கள் தேர்தல் மூலம் எங்களுக்கு வழங்கிய அதிகாரங்களை பறித்தெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.
பிரஜா சக்தியை மக்கள் சக்தியாக மாற்றி அதனை அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார் விடயங்களிலும் ஆலோசனைகள்,பரிந்துரைகள் வழங்குவதோ அல்லது தவறுகளை சுட்டிக் காட்டுவதையோ நாங்கள் எதிர்க்கவில்லை கிராம மட்ட அமைப்புகளின் பங்களிப்பு அபிவிருத்தி திட்டங்களின் போது கட்டாயமானது தான். ஏற்கனவே பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழ் சனசமூக நிலைய கிராம மட்ட அமைப்புக்கள் உள்ளன, அதேபோல் பிரதேச செயலகத்தின் அதிகாரத்தின் கீழ் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட ஏராளமான கிராம மட்ட மக்கள் அமைப்புக்கள் உள்ளன இவற்றை எல்லாம் புறக்கணித்து அரசாங்கம் தற்போது பிரஜா சக்தியை முதன்மைப் படுத்த காரணம் என்ன?
அதுவும் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாகவும், அவர்களுக்கு மேலான அதிகார மையமாகவும் அரசாங்கம் பிரஜா சக்தியை உருவாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரஜா சக்தியின் நிர்வாகத் தெரிவு முதல் அதில் உள்வாங்கப்படும் உறுப்பினர்கள் வரை அவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.
அவர்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை இல்லை அவர்களின் தெரிவுகள் அனைத்தும் முழுக்க முழுக்க ஆளும் அரசியல் கட்சியின் பக்கச்சார்பான தெரிவுகளாக உள்ளது.
குறிப்பாக, அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், கட்சி உறுப்பினர்கள் அல்லது தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்டு தோல்வியடைந்தவர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளை அரசாங்கத் திட்டங்களில் அதிகாரப்பூர்வ பங்கு வகிக்கும் வகையில் வேறு ஒரு பெயரில் மீண்டும் அதிகார மையமாக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம்.
“மக்கள் நிராகரித்தவர்களை பிரஜா சக்தி மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வருவதா அரசாங்கத்தின் நோக்கம்?”/ ஒரு தேர்தலில் மக்கள் ஒருவரை நிராகரித்தால், அந்த நிராகரிப்பை மதிப்பதே ஜனநாயகம்.
ஆனால் தேர்தலில் மக்கள் வழங்காத அதிகாரத்தை வேறு ஒரு குழுவின் ஊடாக வழங்கி, பின்னர் அந்தக் குழுவின் பரிந்துரைகளை மக்கள் பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்குவது மக்களின் தேர்தல் தீர்ப்பை அரசாங்கம் புறக்கணிப்பதாக உள்ளது.
இன்று அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவதில்லை, அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை, கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை, ஆனால், அரச அதிகாரிகள் மற்றும் மத்திய அரச திணைக்களங்களை மட்டும் கொண்டு கிராம மட்ட அபிவிருத்தி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றால், அந்தக் கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு அந்தக் கிராமத்தின் வளர்ச்சியை யார் தீர்மானிக்கிறார்கள்?
அரச அதிகாரிகள் தங்களது நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கடமைகளை செய்ய வேண்டும், மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சேர்ந்து எடுக்கப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்தலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாற்றாக இருக்க முடியாது.
செங்கலடி களுவன்கேணி சம்பவம் தொடர்பிலும் கேள்வி! மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத் தீர்மானத்தின் ஊடாக களுவன்கேணி கிராமத்தில் உள்ள ஐஸ் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிதி தொடர்பில், அரச அதிகாரிகளுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கோ தெரியாமல், பின்னர் “பிரஜா சக்தியின் தீர்மானம்” என்ற அடிப்படையில் அந்த நிதி வீதி அபிவிருத்தித் திட்டத்திற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயம் பிரஜா சக்தி அமைப்பின் அதிகாரம் குறித்து தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
இது உண்மையாக இருந்தால், ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழு தீர்மானித்த நிதி ஒதுக்கீட்டை மாற்றும் அதிகாரத்தை பிரஜா சக்திக்கு யார் வழங்கியது?
அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல், மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரியாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்குத் தெரியாமல் ஒரு குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் அபிவிருத்தி நிதியை மாற்ற முடியுமா?
இவ்வாறு நடந்திருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் இனிமேல் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் பிரஜா சக்திதான் தீர்மானிக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது? அப்படியானால் மக்கள் தேர்தலில் தெரிவு செய்த உள்ளூராட்சி சபைகளும், மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களும் எதற்காக?
இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும். நாங்கள் பிரஜா சக்திக்கு எதிரானவர்கள் அல்ல. பிரஜா சக்தியை உண்மையான மக்கள் சக்தியாக மாற்றி, அனைத்து சமூகங்களின் கருத்துக்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி சமமாக அனைவரும் இணைந்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலம் செயற்பட்டால் அதனை நாம் வரவேற்போம்.
ஆனால், மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து, அவர்களை ஒரு புதிய அமைப்பின் ஊடாக அதிகார மையமாக உருவாக்கி, தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
“மக்களின் வாக்கு இருக்கும்போது, மக்களால் தெரிவு செய்யப்படாதவர்களின் அனுமதி எதற்கு?” என்பதே எங்களது அடிப்படைக் கேள்வி.
எனவே, பிரஜா சக்தி அமைப்பிடம் அனுமதி பெற்றால் தான் குறித்த அபிவிருத்தி திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற அதிகார திணிப்பு குறித்தும், அதன் சட்டபூர்வ அதிகாரம் குறித்தும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு பிரஜா சக்தியின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை அனைத்தையும் ஜனாதிபதி உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி உள்ளூராட்சி சபைகளின் ஜனநாயக சட்டவாக்க ஆட்சி முறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்கள் தேர்தல் மூலம் வழங்கிய ஜனநாயக ஆணையை எந்தவொரு நிர்வாக நடைமுறையின் ஊடாகவும் பறிக்க அனுமதிக்க முடியாது.
இந்த விடயங்களை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று, உள்ளூராட்சி சபைகளின் சட்டபூர்வ அதிகாரங்களையும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளேன் என ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |