அமெரிக்காவில் விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் குறித்து நிமால் சிறிபால டி சில்வா வெளியிட்ட தகவல்
''அமெரிக்காவில் விபத்துக்குள்ளான டாலி சரக்கு கப்பலில் 56 கொள்கலன்கள் ஆபத்தான பொருட்களுடன் காணப்பட்டன, அவற்றில் ஒன்றை மாத்திரம் கொழும்பு துறைமுகத்தில் இறக்க திட்டமிட்டிருந்தனர்'' என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பால்டிமோரில் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளான கப்பல் இலங்கையை நோக்கி ஆபத்தான பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கப்பலின் இலங்கை முகவர் உத்தியோகபூர்வமாக இதனை தெரியப்படுத்தியிருந்தார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இறுதி இலக்கு சீனா
கொழும்பு துறைமுகமே குறிப்பிட்ட கப்பலின் இறுதி இலக்கு இல்லை எனவும் இறுதி இலக்கு சீனா எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச கடல்சார் விதிமுறைகளிற்கு இணங்க துறைமுகத்தை அடைவதற்கு இரண்டு நாட்களிற்கு முன்னர் கப்பலில் உள்ள பொருட்கள் குறித்த விபரங்களை தெரிவிக்கவேண்டும் எனவும் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்வதற்காக கடுமையான சுங்க பரிசோதனைகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் கூறினார்.
டாலி போன்ற கப்பல்களில் பொதுவான மற்றும் ஆபத்தான பொருட்கள் காணப்படும் அவ்வாறான கப்பல்களை திருப்பி அனுப்புவது சாத்தியமற்ற விடயம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |