நிமல் பெரேராவுக்கு உயிரச்சுறுத்தல்! அவுஸ்திரெலியாவில் பதுங்கியுள்ள மற்றுமொரு முக்கிய குற்றவாளி
சிறிலங்கன் விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த பரிவர்த்தனையில் கிடைத்ததாகக் கூறப்படும் தரகு தொகையிலிருந்து 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விவகாரத்தின் முக்கிய சாட்சியாளரான நிமல் பெரேராவின் பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொழிலதிபர் நிமல் பெரேரா சமர்ப்பித்துள்ள பிரமான பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமர்பனங்களை நீதிமன்றில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சமர்ப்பித்த நிலையில் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான நிமல் பெரேரா தற்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார்.
புரூணையில் அமைந்துள்ள நிறுவனம்
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தில் சான்றிதழொன்றை சமர்ப்பித்திருந்த நிலையில், அதனை நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் சவால் செய்யவில்லை.

இதனடிப்படையில் உண்மைகளை கருத்தில்கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இலஞ்ச ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சர்வதேச ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.
ஏர்பஸ் விமானங்களை கொள்வனவின் நிறுவனத்தின் தாய் நிறுவனம் புரூணையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க
குறித்த ஏர்பஸ் பரிவர்த்தனையில் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 1.454 மில்லியன் யூரோக்கள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

‘Biz Solutions’ நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் பணிப்பாளராகவும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனின் மனைவி. பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிலிருந்து ரூ.9 மில்லியன், ரூ.7 மில்லியன், ரூ.2 மில்லியன் மற்றும் ரூ.6 மில்லியன் என நான்கு சந்தர்ப்பங்களில் மொத்தம் ரூ.25 மில்லியன் ஷமீந்திர ராஜபக்ச என்பவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது
மேலும், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிமல் பெரேராவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரில் உள்ள OCBC வங்கிக் கணக்கிற்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பின்னர், அந்த 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்சவுக்கு தாம் வழங்கியதாக நிமல் பெரேரா தனது பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டின் நாணய மாற்று விகிதத்தின்படி அந்தத் தொகையின் பெறுமதி சுமார் ரூ.100 மில்லியன் எனவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நிமல் பெரேரா அவுஸ்திரேலியாவிலிருந்து சத்தியப்பிரமாணம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல்கள்
தமக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகவே தாம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நேரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதும் இலங்கை வந்தார் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நிமல் பெரேராவிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பணம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தற்போது அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும், அவரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்தது.
மற்றொரு சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ச அமெரிக்காவில் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாமல் சார்பில் பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார். தமது வாடிக்கையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது நிமல் பெரேராவின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என அவர் தெரிவித்தார்.
நிமல் தொடர்பான மற்றொரு வழக்கு
நிமல் பெரேரா நாமலுக்கு பணம் வழங்கியதாக உறுதிப்படுத்துவதற்குப் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிமல் பெரேரா பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளதால், அவரது நம்பகத்தன்மை தொடர்பில் பாரிய சந்தேகங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறியிருந்தார்.
பிரான்ஸ் அதிகாரிகளோ அல்லது ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளோ நிமல் பெரேராவுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நிமல் பெரேரா தொடர்பான மற்றொரு வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும், அது கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கு என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வழக்கிலும் Sabre Vision Holding Ltd நிறுவனத்தின் கணக்கிற்கு பணம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தக் கணக்கு தமக்குச் சொந்தமானதல்ல என்றும், அது இத்தாலிய நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும் நிமல் பெரேரா முன்னர் தெரிவித்திருந்ததாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனால், நிமல் பெரேரா ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விதமான வாக்குமூலத்தையும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அதற்கு மாறான வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிமல் பெரேரா வழங்கிய வாக்குமூலங்களை நம்பவில்லை என்றும், அவ்வாறிருக்கும்போது 2026ஆம் ஆண்டு அவரது வாக்குமூலங்களை எவ்வாறு நம்ப முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய நிலைமையை “தேவை ஏற்படும் போது கபரகொயாவையும் தலகொயாவாக மாற்றும் கோட்பாடு” என வர்ணிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனவே, இந்த விடயங்களை விசேட காரணிகளாகக் கருதி தமது வாடிக்கையாளருக்கு பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |