எட்டப்படாத உடன்பாடு : நாளை முதல் நடைமுறையாகப்போகும் அமெரிக்க வரி
இலங்கையிலிருந்து(sri lanka) அமெரிக்காவிற்கு(us) ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஓகஸ்ட் 1) முதல் மேலதிகமாக 30% பரஸ்பர வரி விதிக்கப்பட உள்ளதால், இலங்கையின் ஏற்றுமதித் துறை அமெரிக்க சந்தையில் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பொருந்தக்கூடிய வரி விகிதங்களுடன் மேலதிகமாக இந்த புதிய வரிகள் விதிக்கப்படுவதால், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு பாதகமான நிலை
இந்த புதிய வரிகளை விதிப்பது இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் குறைந்த வரி சலுகைகளைப் பெற்ற இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிடும்போது இலங்கைக்கு பாதகமான நிலை ஏற்படும். இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையின் உற்பத்தி செலவுகள் அதிகமாக உள்ளமை அமெரிக்க சந்தையில் அதன் போட்டித்தன்மையை மேலும் குறைக்கும்.
மறுபுறம், அமெரிக்க நுகர்வோர் இந்த புதிய வரிகளுக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், இது அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும். இது இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு இரட்டை சவால்
மேலும், இலங்கையில் ஒப்பீட்டளவில் அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் அமெரிக்க சந்தையில் இலங்கை ஏற்றுமதிகளின் போட்டித்தன்மையை கடுமையாக பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். இந்த உள் காரணிகளும் புதிய வரிகளை விதிப்பதும் சேர்ந்து இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு இரட்டை சவாலை ஏற்படுத்தும்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஏற்றுமதி வருவாய் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்பதால், இந்த புதிய கட்டணங்களை விதிப்பது இலங்கையின் முழு பொருளாதாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
