அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : முடிவை அறிவித்த சபாநாயகர்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அந்த வகையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தெரிவித்தார்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.
கயந்த கருணாதிலக கோரிக்கை
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக (Gayantha Karunathilaka), நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகரின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பு கோரினார், ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சபாநாயகர் கூறினார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், குறித்த அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கூறினார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட 31 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஓகஸ்ட் 12 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த தனது முடிவை எதிர்காலத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர, தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
