ஜனாதிபதி ரில்வினா: மக்களை ஏமாற்றும் அநுர அரசு - சபையில் சாடிய சாணக்கியன் எம்.பி
நாட்டின் ஜனாதிபதி ரில்வின் சில்வாவா என நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய முடிவூகளை ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வாவே வெளியிடுகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முடிவுக்கு மாறான விடயங்களை அவர் அறிவிக்கின்றார். அதுவே அரசின் முடிவாக வெளிவருகின்றது என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் தலையிட முடியாது
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனீவாவில் இடம்பெற்ற 60 ஆவது அமர்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அளித்த பதில் தமிழ் மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
இலங்கையில் சர்வதேச நாடுகள் தலையிட முடியாது என்ற வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு தமிழ் மக்களின் கோரிக்கைகளை தமிழ் மக்களுக்கான நீதியை முற்றாக நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது.
இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளன. தமிழ் மக்களுக்கான நீதி மறுக்கப்பட்டே வந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கான நீதி மறுப்பை தேசிய மக்கள் சக்தி அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இனப்படுகொலைகளுக்கு நீதி
ஜனாதிபதிகளான மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோரும் இதனை செய்தனர்.
ஆனால் தமிழ் மக்கள் கேட்பது நடந்த அநீதிகளுக்கு இனப்படுகொலைகளுக்கும் நீதி வேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள்
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்திருந்தார்.
ஆனால், அரசாங்கத்தில் இடம்பெறாத - ரில்வின் சில்வாவோ எல்லை நிர்ணயப்பணி முடிந்த பின்னர் தான் மாகாண சபைத் தேர்தல்கள் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தார்.
இப்போது ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அதையே கூறுகின்றார். அப்படியானால் நாட்டில் தீர்மானத்தை எடுக்கும் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் ரில்வின் சில்வாவா என இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
