ஜெனீவா UNHRC அமர்வில் 43 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு
ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் இலங்கைக்கு சுமார் 43 நாடுகள் திறந்த ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவற்றில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, கோட் டி’ ஐவோயர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவுகள், கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ்யா, புருண்டி ஆகியவை அடங்குகின்றன.
உறுதியான ஒத்துழைப்பு
இந்நாடுகள், மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும், சட்டமன்ற சீர்திருத்தங்கள் உட்பட நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் பாராட்டியதாக அமைச்சக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஐ.நா. உயர் மனித உரிமைகள் ஆணையரின் இலங்கை விஜயத்தையும், நாட்டின் உறுதியான ஒத்துழைப்பின் அடையாளமாக வரவேற்றுள்ளன.
அதேசமயம், வளக் குறைபாடுகள் காரணமாக பேரவையில் உள்ள முக்கிய பணிகள் பாதிக்கப்படலாம் என்பதையும், இந்நிலையில் இலங்கைக்கு எதிராக வெளிப்புற பொறிமுறைகளுக்கு வளங்களை ஒதுக்குவது நியாயமல்ல என்பதையும் இந்நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சரியான வழி
வெளிப்புறமாக திணிக்கப்படும் கண்காணிப்பு செயல்முறைகள் பேரவையில் பாகுபாடு, அரசியல்மயமாக்கல் மற்றும் இரட்டைத் தரநிலைகளை உருவாக்கக்கூடும் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளன.
மேலும், மனித உரிமைகளைக் காக்கவும் மேம்படுத்தவும் நாடுகளுக்கிடையே ஆக்கபூர்வ உரையாடல் மற்றும் ஒத்துழைப்பே சரியான வழி என்றும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
