அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரச தரப்பின் நடவடிக்கை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணையில் சட்ட சிக்கல் காணப்படுவதால் சட்ட ஆலோசனைகள் கிடைக்கும் வரையில் நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்காமலிருக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கடந்த 12 ஆம் திகதி முன்வைத்தன.
நம்பிக்கையில்லா பிரேரணை
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் அருண ஜயசேகரவுக்கு எதிராக 15 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவர் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டமை குறித்த குற்றச்சாட்டில் பிரதானமான ஒன்றாக கருதப்படுகிறது.
அருண ஜயசேகரவின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படாத நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு சட்ட இயலுமை கிடையாது என்று ஆளும் தரப்பின் பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இது பழிவாங்கும் பிரேரணை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவில்லை என்றும் ஆளும் தரப்பினர்கள் நாடாளுமன்ற சந்திப்புக்களின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
