பசிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்துள்ளது.
பொருளாதார நிலை, பொது மக்கள் மத்தியில் அது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் விளக்கமளிக்கத் தவறியயை அடுத்து அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது குறித்து அக் கட்சி ஆராய்ந்துள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவது குறித்து கட்சி தற்போது உள்ளக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கூ
ட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே இது குறித்து தமது கட்சி இறுதி முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பாரிய நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள போதிலும், டிசம்பர் 10ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தவறியமைக்காக நிதியமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பசில் ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தமது ஆதரவைக் கோரவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
