பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : தயார் நிலையில் அரசாங்கம்!
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (20.01.2026) இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த விவாதத்துக்கு எதிர்க்கட்சி தயாராக இல்லை எனில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சி
எனினும், இந்த விடயம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை.” என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்தத் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தன்னிச்சையான , புரிந்துகொள்ள முடியாத நடத்தை மற்றும் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை ஆகியவற்றின் அடிப்படையில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |