சீன கப்பல் வருகையால் இந்தியாவுடன் முரண்பாடா -சமாளிக்கிறார் தூதுவர் மொறகொட
பத்து ஆராய்ச்சி கப்பல்கள் வருகை
கடந்த நான்கு வருடங்களில் இலங்கைக்கு பத்து ஆராய்ச்சி கப்பல்கள் வந்து சென்றுள்ளதாகவும் தற்போது வந்து சென்ற சீன கப்பலால் இந்தியாவுடன் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட தெரிவித்தார்.
செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்ட யுவான் வாங் 5 என்ற சீன கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சில நாட்களுக்கு பின்னர் The Hindu பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச காலத்தில் அனுமதி
சீன கப்பலுக்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட விடயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அனுமதி வழங்கப்பட்டவுடன் அதனை திரும்பப் பெறுவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கும் இவ்வாறான பிரச்சினைகளின் ஊடாக இருதரப்பு நம்பிக்கை சீர்குலையும் செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் இருப்பதற்குமான திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்த பின்புலத்தில் இதற்கான போதிய கவனம் செலுத்தப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில், பல்வேறு வகையான 10 ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளதால், இந்த கப்பலின் வருகைக்கும் அதே கொள்கை பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் குழப்ப நிலை
குறித்த விசேட சந்தர்ப்பத்தில், கப்பல் வகைகள் அல்லது தொழில்நுட்ப முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவதில் நாட்டில் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கலாம் என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக பொருளாதார மற்றும் மூலோபாய துறைகளில் இந்திய – இலங்கை ஒத்துழைப்பு தொடர்பான உறவுகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிடமிருந்து கடன் வசதிகள் உள்ளிட்ட 3.8 பில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவிக்கு மேலதிகமாக இந்தியா மற்றும் கொழும்பிற்கு இடையிலான வர்த்தக உறவு, வலுசக்தி பகிர்விற்கான வலையமைப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் எண்ணெய் சேமிப்பு உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் இரு தரப்பிற்கு இடையிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும் இலங்கைக்கான ஆதரவை வழங்கி வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மேலும் குறிப்பிட்டுள்ளார்.

