கோட்டாபயவின் கூட்டத்தை புறக்கணித்த ஹரின்
கூட்டத்தை புறக்கணித்த ஹரின்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற உல்லாச பயணத்துறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை.
அமைச்சர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை அரச தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், அவர் வராதமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும், “கோட்டா கோ கம” அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்
எனினும், சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோட்டாபய விடுத்த பணிப்புரை
இதேவேளை, கலந்துரையாடலின் போது, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய அணுகுமுறையைக் கண்டறியுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்களில் 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல்கள், கொவிட் தொற்று மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் இதன்போது தெரிவித்தார். சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஒரு முக்கிய நடவடிக்கையாக, இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடன் இணைந்து நாட்டின் நிலைமை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாத்துறையை பாதிக்கும் முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரிபொருளின் தட்டுப்பாடு குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

