ஒரே இரவில் தீர்வு கிடைக்காது -அரசாங்கம் அறிவிப்பு
எரிபொருள் நெருக்கடி
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக போதிய எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு இரத்தினங்கள், லிமோனைட், டைட்டானியம் மற்றும் பிற கனிமங்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டு வருமானம் வெறும் 44 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைத்தது.
எனினும் ஓர் எரிபொருள் கப்பலுக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு 52 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் வரிசைகளில் அமைதியின்மை
அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்டிய பகுதிகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் அரசியல் தொடர்புள்ளவர்கள் மற்றும் பாதாள உலகப் பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்யக் காத்திருக்கிறோம் என்ற போலிக் காரணத்தின் கீழ் அமைதியின்மையை ஏற்படுத்துவதில் இவர்கள் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற அமைதியின்மையைத் தணிக்கவும், கும்பலைக் கைது செய்யவும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படும்போது, சில நபர்கள் வன்முறையைத் தூண்டுவதற்காக சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையினரும் இலங்கையர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

