வடக்கு, கிழக்கிற்கு தமிழ் ஆளுநர்கள் - ரணில் முன்னிலையில் பதவிப்பிரமாணம் (படங்கள்)
இரண்டாம் இணைப்பு
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இவர்கள் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் சற்றுமுன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்படி, வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
படங்கள்
முதலாம் இணைப்பு
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்றையதினம் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இன்றையதினம், முற்பகல் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடக்கு மாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஆளுநர்கள்
இதேவேளை, ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அதிபர் செயலகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில், இன்றையதினம் புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கர்ணகொட ஆகியோர் இதற்கு முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.