அத்துமீறி மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
இந்திய (India) கடற்றொழிலாளர் இலங்கை (Sri Lanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை சற்று நிறுத்திக் கொள்ளுமாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் (M.N. Alam) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நடவடிக்கையினால் இப்பிரச்சினையை இலகுவாக முடித்துக் கொள்வதற்கும் இரு தரப்பும் விட்டுக்கொடுப்புடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோமென மன்னாரில் (Mannar) உள்ள அலுவலகத்தில் இன்று(5) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''தமிழக கடற்றொழிலாளர்களின் தடைக் காலம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து அவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழிலை எமது கடற்பரப்பில் நுழைந்து முன்னெடுக்கவுள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
அத்து மீறிய நடவடிக்கை குறித்து நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற விடையம் அவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், அரசின் நடவடிக்கைக்கு வடபகுதி கடற்றொழிலாளர்களாகிய நாங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது அந்த வகையில் நாங்கள் மீண்டும் ஒரு அறை கூவலை விடுக்கின்றோம்.
உரிய தீர்வு
விட்டுக்கொடுப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது உங்கள் நடவடிக்கையை பொறுத்துள்ளது.
சிறிலங்கா அரசிற்கு நாங்கள் வலியுறுத்துவது வடபகுதி கடற்பரப்பில் குறிப்பாக இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நுழைவதை கட்டுப்படுத்த கடல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் மேலும் எங்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வை எடுக்க முடியும்” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |