தேசிய இருப்பைத் தக்கவைக்கும் சாணக்கியம் தமிழரிடம் உள்ளதா... போராடத் தெரியும், தக்கவைக்க தெரியுமா...
ஒரு தேசிய இனத்தின் வரலாறு என்பது வெறும் போராட்டங்களால் மட்டும் ஒருபோதும் எழுதப்படுவதில்லை அந்தப் போராட்டங்களின் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளையும், அடையாளங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் இராஜதந்திர நகர்வுகளாலேயே அது நிலைநிறுத்தப்படுகிறது.
ஈழத்தமிழராகிய எம்மிடம் எதிர்த்துப் போராடும் உணர்வும் அர்ப்பணிப்பும் நிரம்ப இருக்கிறது. ஆனால், பெறப்பட்டவற்றைக் தற்காத்துக் கொள்ளும் அரசறிவியல் சாதுரியமும், தேசிய இருப்பை நீண்டகால அடிப்படையில் தக்கவைக்கும் இராஜதந்திர தொலைநோக்கும் குறைவாகவே உள்ளது, என்ற கசப்பான உண்மை, இன்றைய வடக்கு-கிழக்கு அரசியல் சூழலில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. அதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ் தேசியம் என்ற அடித்தளத்தில் எழுப்பப்பட்ட நினைவமைப்புகளும் வரலாற்று அடையாளங்களும் தகர்க்கப்படும் சூழலில், அவற்றைக்கொண்டே மறுபுறம் பேரினவாத கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன.
நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுதல்
தியாக தீபம் திலீபன் போன்றோரின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுவதும், வரலாற்று ரீதியான நிலப்பரப்புகள் சிதைக்கப்படுவதும் தமிழ் தேசிய அடையாளத்தின் இருப்பை அசைத்துப் பார்க்கும் கள யதார்த்தங்களாக இன்றைக்கு உருவெடுத்துள்ளன.

அதே நேரம் சமகால தாயக நிலப்பரப்பில், தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரிலும், வனவளப் பாதுகாப்பு என்ற போர்வையிலும் நடைபெறும் நில ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும், மக்கள்தொகை பரம்பலையும் சிதைக்கும் நோக்கம் கொண்டவையாகும்.
அரசியல் தத்துவவாதி ஹன்னா அரெண்ட் குறிப்பிடுவதைப் போல, "அதிகாரம் என்பது வெறும் எதிர்ப்பின் மூலம் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை அது நிறுவனமயப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான அரசியல் செயற்பாட்டினாலும், மூலோபாயங்களினாலும் மட்டுமே தக்கவைக்கப்படுகிறது.
பேரினவாத அரசமைப்புகள் அதிகார பலத்தாலும் சட்ட வழிமுறைகளாலும் தங்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முற்படும்போது, தமிழர் தரப்பு இன்னமும் வெறும் எதிர்வினை அரசியலிலும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்ப்புப் போராட்டங்களிலுமே முடங்கிக் கிடப்பது, நமது சுயவிருப்ப அதிகாரத்தை நாமே இழக்கச் செய்யும் பேரபாயமாக மாறி நிற்கிறது.
ஈழ ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின், தமிழ் தேசிய அரசியல் அடுத்தகட்ட இராஜதந்திர வடிவத்தை எடுக்கத் தயங்கும் சூழலைச் சுட்டிக்காட்டும் தத்துவவாதி அண்டோனியோ கிராம்ஷியின் கூற்று இங்கு மிகப்பொருத்தமானதாகும்.
எதிர்ப்புப் போராட்டம்
அதாவது "பழையது அழிந்துகொண்டிருக்கிறது, புதியது இன்னும் பிறக்கவில்லை இந்த இடைவெளிக் காலத்தில்தான் பலவிதமான நச்சு அறிகுறிகள் தோன்றும்." அப்படியானதொரு இடைவெளிக் காலத்தில்தான், நமது வரலாற்றுச் சின்னங்களும் நிலங்களும் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. வெறும் எதிர்வினை முழக்கங்கள் தற்காலிகக் கவனத்தை மட்டுமே ஈர்க்கும்.
ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் ஆய்வாளர் ஏ.ஜே. வில்சன் "ஒரு தேசிய சமூகம் தனது அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டப்பூர்வமான நிறுவனமயமாக்கல் மற்றும் சர்வதேச அனுசரணையுடனான ஒப்பந்தங்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது சாணக்கியமிக்க அரசியல் வியூகங்களே அதன் நீண்டகால இருப்பை உறுதிசெய்யும்." என்கிறார்.

"எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு அநீதியை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட உதவும் ஒரு தொடக்கப் புள்ளியே தவிர, அதுவே இறுதி தீர்வாக முடியாது. போரிடாமல் எதிரியை வெல்வதே மிகச் சிறந்த இராஜதந்திரமாகும். களத்தில் பெறும் தற்காலிக வெற்றியை விட, பேச்சுவார்த்தை மேசையிலும் மூலோபாயக் கட்டமைப்பிலும் தக்கவைக்கும் வெற்றியே நிலையானது."
தமிழ் தேசிய அரசியலில் இத்தகைய மூலோபாய அணுகுமுறையும், சர்வதேச அரசியல் நகர்வுகளுக்கு ஏற்பத் தங்களை மாற்றி வடித்துக்கொள்ளும் அரசறிவியல் சாணக்கியமும் இன்று காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
ஒரு தேசிய இனமாக நமது இருப்பையும் அடையாளத்தையும் தக்கவைத்துக்கொள்ள, வெறும் உணர்ச்சிபூர்வ முழக்கங்களைத் தாண்டி, நில ஆக்கிரமிப்புகள் மற்றும் மக்கள் தொகையியல் மாற்றங்களை சர்வதேச சட்ட விதிகளின் கீழ் ஆவணப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புகளில் முறையான சட்டப் போராட்டமாக மாற்ற வேண்டும்.
புவிசார் அரசியல் போட்டி
அதேவேளையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டியினைச் சரியாகக் கணித்து, பிராந்திய வல்லரசுகளின் நலன்களோடு நமது தேசிய இருப்பையும் உரிமைகளையும் எவ்வாறு பிணைப்பது என்ற இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோலவே வடக்கு-கிழக்கில் சிதறிக்கிடக்கும் அரசியல் சக்திகள், சிவில் அமைப்புகள், கல்விப் புலமையாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தேசிய கொள்கை உருவாக்க மையம் (National Think Tank) உருவாக்கப்பட்டு, உணர்ச்சி சார்ந்த அரசியலில் இருந்து அறிவு சார்ந்த, தரவு சார்ந்த அரசறிவியல் அரசியலுக்குத் தமிழ் சமூகம் நகர வேண்டும்.

எதிர்த்துப் போராடுவது என்பது ஒரு இனத்தின் தற்காப்பு உணர்ச்சி ஆனால், நிலத்தையும் அடையாளத்தையும் தக்கவைப்பது என்பது அந்த இனத்தின் அறிவுப்பூர்வமான இராஜதந்திர திறன்.
அடையாளங்கள் அழிக்கப்படும் போது, அழுவதோ அல்லது வெறும் எதிர்ப்புக் குரல் எழுப்புவதோ மட்டும் நமது தேசிய இருப்பைக் காப்பாற்றாது. எனவேதான் சிதைக்கப்படும் ஒவ்வொரு கல்லுக்கும் பதிலாக, சர்வதேச அரங்கில் மாற்று அழுத்தங்களை உருவாக்கும் அதிகாரத்தையும், சட்டப்பூர்வ தற்காப்பு அரண்களையும் கட்டியெழுப்ப வேண்டும்.
எதிர்ப்பரசியல் கட்டத்தைக் கடந்து, திறம்படத் திட்டமிடும் இராஜதந்திர அரசறிவியலைத் தமிழ் இனம் கையிலெடுக்கும் போதே, அதன் தேசிய இருப்பு நீண்டகால அடிப்படையில் உத்தரவாதப்படுத்தப்படும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |