அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள் - மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்
இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) ஏழாவது மீளாய்வின் கீழ், சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை ஸ்திரத்தன்மை
மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் நீடித்துள்ளன.

உயர்வடைந்த உலகளாவிய எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலைகள் என்பன உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களைத் தொடர்ந்து தூண்டி வருவதால், 2026 ஒக்டோபர் மாதத்தில் ஆண்டிற்கு ஆண்டு ஒப்பீட்டளவில் பணவீக்கம் 8.3% ஆக அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருக்கும் என்ற எதிர்வுகூறலைக் கருத்திற்கொண்டு, பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைக் குறைப்பதற்கு நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என சபை கருதியது.
இவ்வாறான கொள்கை இறுக்கமானது, உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சபை கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |