வெள்ளைத் துணியால் மூடியவாறு யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட திலீபனின் சிலை!
யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட திலீபனின் சிலை காவல்துறையினரால் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிலை இன்று (05) வெள்ளைத் துணியால் மூடிக்கட்டப்பட நிலையில் நீதிமன்ற கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட திலீபனின் சிலை கடந்த 27ஆம் திகதி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிலையைப் பொறுப்பேற்க மறுப்பு
குறித்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்த யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர், சிலையை நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான அனுமதி கோரப்பட்ட போதும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்க மறுத்திருந்தது.

குறிப்பாக சிலை வழக்கில் எந்த ஒரு சந்தேக நபர்களின் பெயர் குறிப்பிடப்படாததால் சிலையை பொறுப்பேற்க நீதிமன்றம் மறுத்திருந்ததுடன் மேலும் சிலை தொடர்பான வழக்கை ஜனவரி மாதத்திற்கும் ஒத்திவைத்தது.
இந்தநிலையில் யாழ்.காவல் நிலையத்தில் கடந்த 8 நாட்களாக வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை இன்று யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது.
காவல் நிலையத்தில் இருந்து வெள்ளைத் துணியால் மூடிக்கட்டப்பட நிலையில், காவல்துறை வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலுக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |