திலீபனின் சிலை நிறுவிய விவகாரம் : யாழ் காவல் நிலையத்தில் இருவர் முன்னிலை!
யாழ்ப்பாணம் - நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் காவல்துறையினர் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (5) காலை தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தர்களான பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் ஆகியோர் கட்சியின் உபசெயலாளர் சட்டத்தரணி மணிவண்ணனுடன் யாழ் காவல்நிலையத்தில் வாக்குமூலமளிக்க முன்னிலையாகியுள்ளனர்.
முன்பதாக நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த 27ஆம் திகதி காலையில் காவல்துறையினரால் அகற்றப்பட்டிருந்தது.
வாக்குமூலமளிக்கச் சென்றனர்
இந்த சம்பவத்துடன் தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையினர் சிலை வைத்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பை சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே இன்று (5) காலை மயூரன் மற்றும பார்த்தீபன் ஆகிய இருவரும் வாக்குமூலமளிக்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |