அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை : பகிரங்க எச்சரிக்கை விடுத்த கிம்
வடகொரியாவின் அணுசக்தி வியூகத்தின் பரிணாம வளர்ச்சியின் மூலம் தனது அணுசக்தி கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அணுஆயுத ஆத்திரமூட்டல் ஏற்பட்டால் அணு ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தனது நாடு தயாராக இருப்பதாகவும் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக வடகொரியாவின் KCNA அரச செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை திட்டத்துடன் தொடர்புடைய படையினர் குழுவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ராணுவ வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பகிரங்க வேண்டுகோள்
இந்த ஏவுகணை சோதனைகள், தனது படைகளின் வலிமையையும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் திறனையும் வெளிப்படுத்தும் என்று வடகொரியத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
அமெரிக்காவில் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணையை வடகொரியா கடந்த திங்கட்கிழமை சோதனை செய்தது.
இது தொடர்பில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளன.
வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு கண்டனம் தெரிவித்து மூன்று நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.
முன்நிபந்தனைகள் இன்றி விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு வடகொரியாவிடம் அவர்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்
கிம் ஜாங் உன்னைத் தவிர, வட கொரியாவின் வலிமையான நபராகக் கருதப்படும் அவரது சகோதரி கிம் யோ ஜாங்கும் இந்த தொடர் நிகழ்வுகள் குறித்து மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தை நடத்துவதை கண்டிப்பதாக அங்கு அவர் கூறியுள்ளார்.
இது நாட்டின் தற்காப்பு உரிமையை மீறும் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் பொறுப்பற்ற செயற்பாடுகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைஉருவாக்க உதவியுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு சபையும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |