இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது: வினோநோகராதலிங்கம் குற்றச்சாட்டு
"இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது,யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்" என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் அமைச்சு மற்றும் மகளிர்,சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர், “மன்னார் மாவட்டத்தில் நறுவிலிக்குளம் பிரதேசத்தில் பொது மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு காரணங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டு இன்று வரை அந்த பணிகள் நிறைவு பெறவில்லை.
மைதான வேலைத்திட்டம்
ஏறக்குறைய 50 சதவீத நிதி ஒதுக்குகைகளுக்கன வேலைத்திட்டங்கள் நடந்தேறியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதான பணிகள் 9 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்திலும் இதே போன்றே ஓமந்தையில் இருக்கின்ற பொது மைதானபணிகள் ஏறக்குறைய பூர்த்தியாகி விட்டது. ஆனால் மின்சார இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
அதனால் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த மைதானம் இன்னும் கையளிக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக இந்த மைதானங்களை வீரர்களிடம் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொறுப்புக்கொடுக்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இளைஞர்களுக்குரிய வாய்ப்பு
முல்லைத்தீவில் மாவட்டத்திற்குரிய மைதானம் இல்லை. ஒரு மைதானத்திற்குரிய காணியை இனம் காண்பதற்கு எல்லோருமே தடையாக இருந்துள்ளார்கள்.
3 இடங்களில் காணி பார்த்தார்கள் ஆனால் ஒரு மைதானத்தை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஒவ்வொரு காரணம் கூறி காலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அங்குள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.
72 வயதான அகிலத்திரு நாயகி
அண்மையில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 72 வயதான அகிலத்திரு நாயகி என்ற வீராங்கனை பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
வன்னியில் 72 வயதிலும் சாதிக்கக்கூடிய வீர, வீராங்கனைகள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் இளைஞர்,யுவதிகளுக்கு விளையாட்டுக்களில் வாய்ப்புக்கள் வழங்கப்படும் பட்சத்தில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பார்கள்.
அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி கொடுங்கள். வடக்கு மாகாணத்தில் இன்று இளைஞர்கள் போதைப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.
அவர்கள் வேறு திசைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். தற்கொலை செய்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள் கூட மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
யுத்தத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள்
இளைஞர்களுக்குரிய வாய்ப்புக்கள்,வசதிகள் மறுக்கப்பட்டதாலேயே ஆயுதப்போராட்டம் உருவானது இளைஞர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு இல்லை.
போதைப்பொருள் புழக்கத்திற்கு அங்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர். போதைப்பொருள் விற்போர், வாங்குவோரை காவல்துறையினருக்கு தெரியும்.
பாவனையாளரை காவல்துறையினருக்கு தெரியும். ஆனால் யுத்தத்தில் எவ்வாறு இளைஞர்கள் கொல்லப்பட்டார்களோ அதேபோன்று இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மூலமும் அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |