சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ள வடக்கின் சில வைத்தியசாலைகள்!
வடமாகாணத்திலுள்ள 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட மாவட்டப் பொது வைத்தியசாலைகளை, ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்திய சிகிச்சைகள், சத்திர சிகிச்சை மற்றும் ஆய்வுகூட வசதிகளுக்கு சமமான வசதிகளை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தற்போது மாகாண சபைகளால் நிர்வகிக்கப்படுவதும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகள் நிறுவன வகைப்படுத்தலின் கீழ் காணப்படும் வைத்தியசாலைகள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிஸ்ஸாவெல, கம்பஹா, மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
வைத்திய சேவை வழங்கலின் தரம், சமத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை அதிகரிப்பதற்காகவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் அவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது பொருத்தமென இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தை அடைவதற்காக குறித்த மாவட்ட பொது வைத்தியசாலைகளை ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு ஸ்ரீலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.