தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் பொறுப்பு வாய்ந்த செயற்பாட்டின் ஆதாரங்கள் (படங்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட பல
கட்டமைப்புக்கள் இன்றும் மக்களுக்கு பயனுடையதாக இருப்பதனை அவதானிக்கலாம்.
நீண்டகால நோக்கில் திட்டமிட்டு மேற்கொண்ட அவர்களது செயற்பாடுகளே இந்த பயன்பாட்டுக்கு காரணமாகியுள்ளது. காடுகளைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாது மீள் வனமாக்கல் செயற்பாடுகளில் பாரியளவிலான முயற்சிகளை அவர்கள் செய்திருந்தார்கள்.
வீதியோரங்களில் உருவாக்கப்பட்ட மீள்வனமாக்கல் செயற்பாடுகளில் பயன்மிக்க தாவரங்களை நாட்டி வளர்த்திருந்தனர். தேக்கு, சவுக்கு, காயா, பனை, வேம்பு, சஞ்சீவி என பலவகை தாவரங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம் என்றுரைக்கின்றார்
மண்பற்றுக் கொண்டவரும் விடுதலைப்புலிகளின் வனவளப் பிரிவில் பணியாற்றியவருமான இப்போது வயோதிபராகவும் உள்ள மணி ஐயா.
விடுதலைப்புலிகளின் பச்சைக்காயா மரக் காடுகள்
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் உள்ள காயா மரக்காடுகளைப் பற்றிய கருத்துக்களை அவரிடம் கேட்ட போது தேக்குமர காடுகள் பிரதானமாக உருவாக்கப்பட்ட போதும் அவற்றிடையே வேறு மரக் காடுகளையும் உருவாக்கியிருந்தனர்.
தேக்கு மரங்களை மட்டுமல்லாது வேறு மரங்களையும் நாட்டி அந்த மரக் காடுகளை உருவாக்குவதன் மூலம் மீள்வனமாக்கலில் காட்டுப் பல்வகைமையை உருவாக்க முயன்றிருக்க வேண்டும். அதன் ஒரு செயற்பாடாகவே காயா மரக்காடுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சஞ்சீவி, காயா,வேம்பு மரங்களோடு இன்னும் பல மரங்களையும் கொண்ட சிறு சிறு காடுகளை முள்ளியவளையில் இருந்து கூழாமுறிப்பு வரையான வீதியின் இரு பக்கங்களிலும் அவதானிக்க முடியும் என மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டின் நாளைய தேவைகளை கருத்தில் கொண்டு விறகுகளை பெறுவதற்கும் வெட்டு மரங்களைப் பெறுவதற்கும் வனங்கள் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கும் விடுதலைப்புலிகளின் வனவளத்திட்டமிடல் பிரிவினர் தங்கள் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி இருக்கலாம் என துறை சார் அறிஞர்கள் சுட்டுக்காட்டுவதும் இங்கே நோக்கத்தக்கது.
பச்சைக்காயா மரங்கள் பயன்பாடுமிக்க மரங்களாகும். காயா மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ளன. அவை இருபது வருடங்களுக்கும் மேலான வயதுடையவை என சுட்டிக் காட்டப்படுகின்றது.
50 மீற்றர் நீளம் கொண்ட இந்த கூழாமுறிப்பு காயாக் காடு முன்னும் பின்னுமாக தேக்கங்காடுகளை கொண்டமைந்துள்ளது.காட்டின் அடுத்த பக்கம் இயற்கை பெருங்காட்டைக் கொண்டுள்ளது.
காட்டிடையே குளிர்ச்சியான சூழல் நிலவுவதோடு ஊர்வன பலவற்றின் வாழிடமாகவும் இருப்பதை அவதானிக்கலாம். காட்டு விலங்குகள் பலவற்றின் நடமாடும் பகுதியாகவும் சூகை எனப்படும் கறுப்பு கடி எறும்புகளை அதிகம் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
கூழாமுறிப்பு இயற்கைக் காடு
மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் மாங்குளத் திசையில் முள்ளியவளையை அடுத்துள்ள கிராமம் கூழாமுறிப்பு ஆகும். அதன் பெயரிலேயே இந்த காடு பெயரிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் உள்ள இயற்கை காடுகளில் ஒன்றாக கூழாமுறிப்பு காடு அமைந்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பாதுகாக்கப்படும் இயற்கை காடாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.பெரிய நிலப்பரப்பில் பரந்துள்ள இந்த காடு கூழாமுறிப்பு A காடு எனவும் கூழாமுறிப்பு B காடு எனவும் இரண்டு பிரிவுகளாக காணப்படுகின்றது.
கூழாமுறிப்பு காட்டினை இரு பெரும் துண்டுகளாக பிரித்து வைத்திருப்பது முல்லைத்தீவு மாங்குளம் (A34) பிரதான வீதியாகும். மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் கிழக்கு பகுதி கூழாமுறிப்பு A காடாகவும் மேற்குப் பகுதி கூழாமுறிப்பு B காடாகவும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காயா மரங்களின் பயன்கள்
வன்னிக்காடுகளில் உள்ள காயா வகை மரங்களில் பலவகை மரங்கள் உள்ளன.
சிவப்பு காயா, கறுத்த காயா,பச்சை காயா போன்றவற்றை சுட்டிக்காட்ட முடியும் என வன்னிக்காடுகளில் சில இடங்களை மேச்சல் தளங்களாக கொண்டு தங்கள் கால்நடைகளை பாரம்பரியமாக பராமரிக்கும் சிலர் மரங்கள் தொடர்பான தங்கள் அறிவினைப் பகிர்ந்து கொண்டனர்.
சிவப்பு அல்லது செந்நிறத்தில் தண்டினை கொண்டுள்ள காயா மரங்கள் சிவப்பு காயா என அழைக்கப்படுகிறது.இது வன்மையான தண்டுகளைக் கொண்ட மரங்கள் ஆகும்.
சிவப்பு காயா உயர்ந்து வளரக் கூடியதும் நேரான தண்டுகளை கொண்டதுமான மரவகைகளாகும்.முத்தையன்கட்டு காடுகளில் இவற்றை அதிகமாக காணலாம் எனவும் காடுகள் பற்றிய தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டனர்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வீடுகளை அமைப்பதற்கும் மாட்டுக்கொட்டகைகளை அமைப்பதற்கும் பாடசாலை,தனியார் கல்வி நிலையங்களை அமைப்பதற்குமான மரங்களாக சிவப்பு காயா மரங்கள் பயன்பட்டதாக திலீபன் கல்வி நிலையத்தின் செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
கறுத்த தண்டினை கொண்ட காயா மரங்கள் கறுத்த காயா அல்லது அலம்பல் காயா எனப்படுகின்றது. இவை அதிகமாக வேலிகளை அமைப்பதற்கும் பயிற்றம் கொடி, இராசவள்ளி,பாகல் கொடிகளை படர விடுவதற்கும் பயன்படுவதாக பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
அலம்பலின் நன்கு காய்ந்த தண்டுகளை விறகுகளாகவும் பயன்படுத்த முடியும் என மேலும் குறிப்பிட்டார். பச்சை நிறத்தில் அல்லது மெல்லிய சாம்பல் நிறத்தில் தண்டுகளை கொண்ட காயா மரங்கள் பச்சை காயா மரங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
இவை உயர்ந்து வளரக்கூடியன. நேரான தண்டுகளைக் கொண்ட இவை பருமன் அதிகரிப்பையும் விரைவாக காட்டக் கூடியனவாக இருக்கின்றன.
வெட்டு மரங்களாகவும் நிழல் தரும் மரங்களாகவும் பயன்படுத்த முடிவதோடு குறுகிய காலத்தில் விரைவாக வளர்வதால் விறகுக்காகவும் இவை மீள்வனமாக்கலில் பயிரிடப்படுகின்றன என வனவள பாதுகாப்பு திணைக்களத்தினைச் சேர்ந்த ஒருவர் பச்சை காயா மரங்களின் பயன்கள் பற்றி கேட்ட போது விளக்கியிருந்தார்.
பச்சைக் காயா மரங்கள் நிழல் தரும் மரங்களாக பயன்படுத்தப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் கூழாமுறிப்பு A காட்டின் வீதியோரப் பகுதியில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மீள்வனமாக்கல் செயற்பாட்டில் பச்சை காயா மரங்களே பயிரிடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 11 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.