வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வட மாகாண கல்வி திணைக்களத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின் அரசியல் தலையீடு காரணமாக ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது வடமாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய இடமாற்ற சபையை அரசியல் தலையீடு காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் புறக்கணித்திருந்தது.
பலரது பெயர்கள்
இந்நிலையில் குறித்த இடமாற்றப் பட்டியல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரசன்னம் இன்றி வெளியிடப்பட்டுள்ளது.
சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.
ஏலவே வெளிமாவட்ட சேவையையும், வெளிமாவட்ட சேவையை ஒத்த சேவையையும் தமது சேவை நிபந்தனை காலத்துக்கு மேலதிகமாகவும் பூர்த்தி செய்துள்ள பலரது பெயர்கள் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இது தற்செயலாகவோ தவறுதலாகவோ இடம்பெற்ற விடயமல்ல.
இடமாற்றங்கள்
பதில் வடமாகாண கல்வி பணிப்பாளராக இருந்து தற்போது மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளராக பணியாற்றும் பிரட்லி என்னும் அதிகாரியின் வடமாகாண கல்வியை குழப்பும் செயற்பாடே இதுவாகும்.
குறிப்பிட்ட ஆசிரியர் சங்கமொன்றின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று கொண்டு வேண்டுமென்றே பழிவாங்கும் முகமாக, வெளிமாவட்ட சேவைகளையும் அதற்கொத்த சேவைகளையும் பூர்த்திசெய்தோரும் குறித்த இடமாற்ற பட்டியல்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அரசியல் நிகழ்ச்சி நிரலில் நடைபெற்ற குறித்த இடமாற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
குறித்த இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுடனான தொழிற்சங்க செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள கிளீன் பீல்ட் விளையாட்டு கழக மண்டபத்தில் நடைபெறும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
