வடக்கிற்கான தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு
புனரமைப்புப் பணிகளுக்காக நாளை (19) முதல் வடக்கு தொடருந்து மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் மஹவ - அநுராதபுரம் இடையிலான தொடருந்து பாதை தற்காலிகமாக மூடப்படும் என தொடருந்துபொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
தொடருந்து திணைக்களம்
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ - ஓமந்தை வரையிலான தொடருந்து பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதவாச்சி - தலைமன்னார் தொடருந்து பாதையின் அபிவிருத்திப் பணிகள் நாளை (19) ஆரம்பிக்கப்படும் எனவும் தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து பாதையில் ஐந்து தொடருந்து பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வழமைபோன்று சேவை
எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தொடருந்து பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு - தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை (19) முதல் அநுராதபுரம் - காங்கேசன்துறை வரையும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை - காங்கேசன்துறை வரையும் ‘யாழ் ராணி’ தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |