யாழ் மாவட்ட செயலகம் முன்பாக வெடித்த போராட்டம் : பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று (19) இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டு மாவட்ட செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த ஆசிரியர் போட்டிப் பரீட்சையிலும் அதனை அடுத்து வெளியிடப்பட்ட நேர்முகத்தேர்வு பெயர் விபரங்கள் தொடர்பிலும் வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளது.
ஏமாற்றும் செயற்பாடாக அமைந்துள்ளது
குறிப்பாக இந்த பட்டியல் எத்தகைய அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பதை வைத்து நாம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பது புலனாகிறது.
குறிப்பாக அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் பெருவாரியாக பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டிருப்பது எம்மை முழுவதுமாக ஏமாற்றும் செயற்பாடாக அமைவதுடன் அது அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே இது தொடர்பாக நீதி கேட்பது எமது கடமையாகும். குறித்த பரீட்சை புள்ளிகளின் நியாயமான முறையையும் அத்தோடு அரச சேவை பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சரிசமமாக அதாவது 50க்கு 50 என்ற விகிதத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பான நியாயமான சட்டவலுவிற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வடமாகாணம் தழுவிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முனைந்து வரும் நிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்” என தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |