2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு
2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
புதுவருடத்திற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (01) நீதி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் ஆண்டு
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
''2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதை நாம் அறிவோம். அடுத்து எந்த மாதிரியான தேர்தல் வந்தாலும் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது.
ஜனநாயக சமூகத்தில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, அமைதியான தேசத்தை அமைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரச ஊழியர்கள் என்றவகையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் உறுதிப்பிரமாணம் வழங்கினாலும் அரச ஊழியர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை.
எனினும் நீதி அமைச்சின் அதிகாரிகளாக நாங்கள் நாட்டில் இருக்கும் முன்மாதிரியான அமைச்சு என்பதை மக்கள் மத்தியில் உறுதிப்படுத்தி இருக்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்
அத்துடன் உலகில் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடுகளை பார்க்கும்போது இந்தளவு குறுகிய காலத்துக்குள் ஸ்திரநிலைக்கு வந்த வேறு நாடு இல்லை.
எமது நாட்டின் பொருளாதாரம் மிகவும் கீழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. நாங்கள் தற்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
2023ஆம் ஆண்டும் ஜீ.எஸ்பி பிளஸ் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையை பெற்றுக்கொள்ள தேவையான முக்கியமான அளவுகோல்களை பூரணப்படுத்தும் பொறுப்பை மேற்கொண்டது நீதி அமைச்சாகும்.
வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் நாங்கள் நாடவடிக்கை எடுத்தோம்.
60 புதிய சட்ட மூலங்கள்
மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் 60 புதிய சட்ட மூலங்களை அனுமதித்துக்கொள்ள தேவையான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியலமைப்பு புரட்சி 21ஆம் அரசியலமைப்பு திருத்தமாகும். ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல புதிய சட்டங்களை அனுமதித்துக்கொண்டு மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம்.
அதனால் மதம், மொழி, இன வர்க்கமாக பிளவுபட்டு செயற்பட்டால் நாடு என்ற வகையில் நாங்கள் எதிர்பார்க்கும் இலக்குக்கு செல்ல முடியாது.
அதனால் 2024 ஆம் ஆண்டின் முதல் வாரத்துக்குள் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்வோம்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |