அரசின் தீர்மானங்களில் தமக்கு தொடர்பில்லையாம் - கதைவிடுகிறார் மைத்திரி
தற்போதைய அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருந்து கொண்டு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொண்டு தற்போது நெருக்கடி ஏற்பட்டவுடன் அரசாங்கத்தின் தீர்மானங்களில் தாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள். 13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.
நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவின .19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.
ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.