பொறிஸ் ஜோன்சனுக்கு வலுக்கும் நெருக்கடி -அனுப்பப்பட்டது கடிதம்
கொரோனா விதிமுறையை மீறிய விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருந்த சமயத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மற்றும் அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கலந்து கொண்ட விவகாரம் அந்த நாட்டின் அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக லண்டன் காவல்துறையினர் அண்மையில் விசாரணையை தொடங்கிய நிலையில், இந்த சம்பவங்களுக்காக பொறிஸ் ஜோன்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
ஆனாலும் இந்த விவாகரத்தில் பொறிஸ் ஜோன்சன் பதவி விலக வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா விதிமுறையை மீறிய விவகாரத்தில் பொறிஸ் ஜோன்சனிடம் விசாரணை நடத்துவதற்காக லண்டன் காவல்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள் குறித்த முழுமையான விபரங்களை உண்மையாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
