தேசிய மக்கள் சக்தியும் ஒரு இனவாத கட்சியே : குற்றம் சுமத்தும் அரசியல் ஆய்வாளர்
தேசிய மக்கள் சக்தியும் அடிப்படையில் ஒரு இனவாத கட்சியே என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்தினால் தனது இனவாத வாக்கு வங்கியில் வீழ்ச்சியடைந்து விடும் என அக்கட்சி அஞ்சுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
[ZLQY4MM ]
மாகாண சபைத் தேர்தல்
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தயக்கம் காட்டுவதைப் போலவே தெரிகின்றது.
இதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று தமது வாக்குகள் குறைந்துவிடும் என்ற அச்சம். இரண்டாவது தமிழர்களுக்கு ஒரு அரசியல் களம் கிடைத்துவிடும் என்ற அச்சம்.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கின்றன.
மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிடுவது அவசியம். இல்லாவிட்டால் வட மாகாண சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசிய கட்சிகள் கைப்பற்றுவது கடினமாகவே இருக்கும்.
தேசிய மக்கள் சக்தி தலைவர்களின் எளிமையான நடத்தை, போதைவஸ்துக்கும், ஊழலுக்கும் எதிரான அவர்களது செயற்பாடு தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை கவர்ந்தே வருகின்றது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
