PSTA வரைவில் பல குறைபாடுகள்: மனித உரிமைகள் உயர் ஆணையர் அறிக்கை
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள பல குறைபாடுகள், முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திலும் அடங்கியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவிக்கிறது.
சட்டமூலத்தை எவ்வாறு திருத்த வேண்டும் என்பது குறித்த 9 பரிந்துரைகளை முன்வைப்பதன் மூலம் அவர்கள் இதை வலியுறுத்துகின்றனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் மசோதாவை 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம்
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டமூலமானது, தன்னிச்சையான செயல்களையும் பாகுபாட்டையும் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கோட்பாடுகளுக்கு இணங்க வரைவு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

அதன்படி, முன்மொழியப்பட்ட மசோதாவை எவ்வாறு திருத்த வேண்டும் என்பது குறித்து அந்த அலுவலகம் 9 பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளது.
01. பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களின் வரையறைகளைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் முன்வைத்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் குடிமைச் செயல்பாட்டு உரிமைகளைக் குற்றமாக்கும் சட்டப் பிரிவுகளைக் கணிசமாகத் திருத்துதல் அல்லது நீக்குதல்.
02. ஒவ்வொரு கைது மற்றும் தடுப்புக்காவலையும் தாமதமின்றி சுதந்திரமான மற்றும் திறமையான நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்துதல்.
03. சித்திரவதை, கொடுமைப்படுத்துதல், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் கட்டாயமாக காணாமல் போதல் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்புகளை வலுப்படுத்துதல்.
04. முறையான சட்ட நடைமுறையையும் நியாயமான விசாரணைகளையும் உறுதி செய்தல் 05. ஆய்வு, நுழைவு மற்றும் பறிமுதல் அதிகாரங்களுக்கான நீதிமன்றப் பிடியாணைகளை இயற்றுதல்.
06. குடிமைப் காவல் படைக்கான முன்னுரிமையை உறுதி செய்தல்.
07. சுயாதீனமான மேற்பார்வை, பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வுகளைத் திறம்பட நிறுவுதல்.
08. விலக்குரிமை தொடர்பான பிரிவுகளைத் துல்லியமான முறையில் முன்வைத்தல்.
09. வரைவின் மீது மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு முன் அர்த்தமுள்ள பொது ஆலோசனையை நடத்துதல்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |